போர்ப்ஸ் ஏசியா' இதழ் தயாரித்த சிறந்த சமூகவாதிகள் மற்றும் நன்கொடையாளர்கள் பட்டியலில் நான்கு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
"போர்ப்ஸ் ஏசியா' கடந்த நான்கு ஆண்டுகளாக, ஆசிய நாடுகளின் சிறந்த சமூகவாதிகள் மற்றும் நன்கொடையாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. நடப்பாண்டில், 48 பேர் அடங்கிய பட்டியல் தயாரித்துள்ளது. அதில், இந்தியாவை சேர்ந்த விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி, எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் நிறுவனர் சிவ் நாடார், உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் ஜி.எம்.ஆர்., குழுமத்தின் நிறுவனர் கிராந்தி மல்லிகார்ஜூன ராவ், இந்தி திரைப்பட நடிகர் விவேக் ஓபராய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கிராமங்களில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களை நகரங்களுக்கு அழைத்து வந்து, பள்ளிகளில் படிக்க வைப்பது தொடர்பாக சிவ் நாடாரும், கல்வி, குழந்தைகள் ஆரோக்கியம், சத்தான உணவு வழங்க டிரஸ்ட்களுக்கு, கடந்தாண்டு டிசம்பரில், 9,200 கோடி ரூபாய் அளித்தது தொடர்பாக அசிம் பிரேம்ஜியும், இந்தியாவில் 20 இடங்கள் மற்றும் நேபாளத்தில் ஒரு இடத்தில் ஏழை மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, ஜி.எம்.ஆர்., வரலட்சுமி பவுண்டேஷனுக்கு சென்ற மார்ச் மாதத்தில், 1,564 கோடி ரூபாய் ஒதுக்க முன்வந்த மல்லிகார்ஜூன ராவும், கல்வி, சுகாதாரம் மற்றும் பேரழிவு காலங்களில் பெரியளவில் நிதி வழங்கி, நிதி திரட்டி கொடுத்த வகையில், இந்தி திரைப்பட நடிகர் விவேக் ஓபராயும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை தவிர, ஆசியாவில் இருந்து இடம் பெற்ற பிரபலங்களில் முக்கியமானவர் ஹாங்காங்கை சேர்ந்த ஜாக்கி சான். இவர் ஜாக்கி சான் அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்.

No comments:
Post a Comment