ZTAMIL தமிழ் செய்திகள்

மழைநீர் சேமிப்பு திட்டம் புத்துயிர் பெறுகிறது(Stormwater Storage Project)

Written By Latest News on Sunday, 26 June 2011 | 18:56

Stormwater Storage Project,
தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம், பாதாளத்திற்கு சென்றுவிட்டதால், மழைநீர் சேமிப்பு திட்டத்திற்கு புத்துயிர் கொடுக்க அரசு ஆலோசித்து வருகிறது.இந்தியாவில் தமிழகம், ராஜஸ்தானில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமுள்ளது. தமிழகத்தில் நிலத்தடி நீர் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. முன்பு 10 மீட்டர் ஆழத்தில் கிடைத்த தண்ணீர், இன்று 100 மீட்டர் ஆழத்தில் கூட கிடைப்பதில்லை. பொதுவாக, ஓராண்டில் எவ்வளவு மழை பெய்கிறதோ அந்த அளவு தான் நிலத்தடி நீரை பயன்படுத்த வேண்டும். ஆனால், 10 லிட்டர் மழைநீர் சேமித்தால், 12 லிட்டரை நாம் உறிஞ்சுகிறோம். இதை கருத்தில் கொண்டு, 2001-06 அ.தி.மு.க., ஆட்சியில் மழைநீர் சேமிப்பு திட்டத்தை அமல்படுத்தியது.
அரசு, தனியார் கட்டடங்கள், வீடுகளில் மழைநீர் சேமிப்பு தொட்டி கட்டாயமாக்கப்பட்டது. புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே உள்ளாட்சிகள் அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் முழு வீச்சில் போர்வெல், கிணறுகள் அருகே மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டன. சட்டம் போட்டு விட்டனரே என கருதிய சிலர், பெயருக்கு மழைநீர் தொட்டிகளை அமைத்தனர். அரசு கட்டடங்களில் அமைக்கப்பட்ட தொட்டிகளே இதற்கு சாட்சி. ஆயினும், அதிகளவு மழைநீர் சேமிக்கப்பட்டு, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், நிலத்தடி நீர் மேலாண்மைச் சட்டம் (2003) இயற்றப்பட்டது. நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்தல் மற்றும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல உரிமம் பெறுதல்; வீடுகளில் ஒரு எச்.பி., திறனுக்கு குறைவான மின்மோட்டார்களை பயன்படுத்துதல்; கிணறுகள், போர்வெல்களை குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஆழப்படுத்துவதை கட்டுப்படுத்துதல்; கண்காணிக்க நிலத்தடி நீர் மேலாண்மை ஆணையம் அமைத்தல்; தேவையான பகுதிகளில் மட்டும் சட்டத்தை அமல்படுத்துதல் என்பன உட்பட பல்வேறு விஷயங்கள் இச்சட்டத்தில் இடம் பெற்றன. சட்டம் அமலுக்கு வர தாமதமானது. 2006ல் ஆட்சி மாறியது.

தி.மு.க., ஆட்சியில் (2006-11) மழைநீர் சேமிப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்ட து. கட்டடங்களில் ஏற்படுத்தப்பட்ட மழைநீர் சேமிப்பு அமைப்புகள் பராமரிக்கப்படவில்லை. அவை மழைநீரை சேமிக்கும் சக்தியை இழந்தன. தமிழகத்தில் பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்திற்கு சென்றுவிட்டது. மேலும், தி.மு.க., ஆட்சியில் நிலத்தடி நீர் மேலாண்மைச் சட்டப்படி ஆய்வு செய்யப்பட்டது. சிறு, குறு விவசாயிகள் 85 சதவீதம் கிணறு, போர்வெல்களை பயன்படுத்துகின்றனர். மீதி 15 சதவீதம் தொழிற்சாலைகள் பயன்படுத்துகின்றன என தெரியவந்தது. விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு வரலாம் என கருதி சட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட மழைநீர் சேமிப்பு திட்டம் பற்றி ஆராய்ந்து, அதை மேலும் சிறப்பாக செயல்படுத்த தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. மண்ணின் தன்மைக்கேற்ப முறைப்படி அமைத்தால் தான் நோக்கம் நிறைவேறும். மழையின் போது ரோடுகளில் வீணாகும் நீரையும் சேமிக்க திட்டமிட வேண்டும். நிலத்தடி நீர் மேலாண்மை சட்டத்தையும் அமல்படுத்த வேண்டும். நபார்டு மானியம்: தமிழகத்தில் 18 லட்சம் பாசன கிணறுகள் உள்ளன. இவற்றின் நீர் மட்டத்தை உயர்த்த மழைநீர் சேமிப்புத் தொட்டி அமைக்க, மத்திய அரசு நபார்டு மூலம் சிறு விவசாயிகளுக்கு 4,000 ரூபாய், பெரிய விவசாயிகளுக்கு 2,000 ரூபாய் மானியம் வழங்கியது. சிலர் பெயரளவிற்கு அமைத்ததோடு சரி. விவசாயிகளிடம் விழிப்புணர்வு இல்லாததால், இந்நிதியின் பெரும்பகுதி மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

நன்றி
தினமலர்

No comments:

Post a Comment