ZTAMIL தமிழ் செய்திகள்

அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்,பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு

Written By Latest News on Saturday, 25 June 2011 | 19:07

 சென்னை : "பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்' என, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர். ம.தி.மு.க., சார்பில், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர்கள் வெளியிட்ட அறிக்கை: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்: மண்ணெண்ணெய், காஸ் சிலிண்டர், டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விலை உயர்வு, மக்களுக்கு கட்டுப்படியாகக் கூடியது என, மத்திய அமைச்சர் கூறியிருப்பது விந்தையாக உள்ளது. கூலி வேலைக்குப் போனால் தான் குடும்பம் நடத்த முடியும் என்ற நிலையில் உள்ள ஏழை, நடுத்தர மக்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டால், பற்றாக்குறையை ஈடுகட்ட எங்கே போவது? மக்கள் நல அரசுக்கு இலக்கணம், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக இருக்க வேண்டும். வறுமையில் வாட்டுவதாக இருக்கக் கூடாது.
தண்டச் செலவையும், தேவையற்ற திட்டங்களுக்கான செலவையும், இந்திய அரசு தவிர்த்தாலே, விலை உயர்வுக்கு அவசியம் ஏற்படாது. அதைவிட்டு, மக்களின் மேல் கூடுதல் செலவை சுமத்துவது கண்டிக்கத்தக்கது. தற்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வு மட்டுமின்றி, கடந்த காலங்களில் உயர்த்தப்பட்ட விலை உயர்வையும், திரும்பப் பெற வேண்டும். அரசின் பற்றாக்குறையை ஈடுகட்ட, மக்களை வாட்டி எடுப்பது உண்மையான ஜனநாயகம் ஆகாது.
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: இந்த விலையேற்றம், எண்ணெய் நிறுவனங்கள் மக்களை சுரண்டி கொள்ளை அடிப்பதற்கான அநியாய ஏற்பாடாகும். விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, ம.தி.மு.க., சார்பில் 28ம் தேதி மாலை 3 மணிக்கு, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: ஏழை மக்கள் மீது, அரசுக்கு இரக்கம் இல்லையோ என்ற அளவிற்கு, விலை உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. உலக சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது, மறுக்க முடியாத உண்மை. இதை சமாளிக்க எத்தனையோ வழிகள் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் வரிகளை குறைத்துக் கொள்வது, தனியார் எண்ணெய் நிறுவனங்களிடம் கூடுதல் வரி வசூலிப்பது, ஆடம்பர வாகனங்கள் மீதான வரியை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அதை செய்யாமல், ஏழை மக்களின் மடியில் கை வைப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.
இ.கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன்: டீசல், காஸ் விலை உயர்வு, ஏற்கனவே விலைவாசி உயர்வால் அல்லல்படும் சாதாரண மக்கள் மீதான மூர்க்கத்தனமான தாக்குதல். முக்கிய பொருட்களின் விலைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ள நிலையில், டீசல், காஸ் விலை உயர்வு, மீண்டும் அனைத்துப் பொருட்களின் விலையை உயர்த்தும். ஏழை, எளிய மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வை, மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment